சிங்கப்பூரில் அறுவை சிகிச்சை மூலம் (சிசேரியன்) பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 1980 _ ம் ஆண்டில் 15 சதவிகிதம் இருந்த சிசேரியன், 1990 _ ம் ஆண்டில் 22 சதவிகிதமாகவும், 2002 _ ல் 30 சதவிகிதமாகவும் அதிகரித்துள்ளது. இதற்குக் காரணம், சிங்கப்பூர் பெண்கள் வேலை போன்றவற்றிற்காக குழந்தைப்பேற்றைத் தள்ளிப்போடுவதே. இந்நிலையில் அவர்கள் அறுவை சிகிச்சை செய்யவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகின்றனர். இதில் வருத்தமளிக்கும் விஷயம், வயது காரணமாக சர்க்கரை வியாதி போன்றவை சில தாய்களுக்கு ஏற்படுவதுதான். இதனால் சர்க்கரை வியாதி இருக்கும் தாய்மார்களுக்கு அறுவை சிகிச்சை செய்யவே அங்கு மருத்துவர்கள் பயப்படுகின்றனர். காரணம், தாயின் உடல் ஆரோக்கியத்திற்கு ஏதேனும் தீங்கு ஏற்பட்டு அது சட்டச்சிக்கலில் கொண்டு போய்விடுமோ என்றுதான்.‘பத்து கர்ப்பிணிப் பெண்களில் ஒருவருக்கு சர்க்கரை நோய் உள்ளது. முன்பே இவர்களுக்கு இவ்வியாதி உள்ளது அல்லது கருத்தரித்த பின்னர் ஏற்படுகிறது. கருத்தரித்த பின் கட்டுப்பாடு இல்லாமலிருந்தால் குழந்தையின் எடை அதிகரித்து, பிரசவ நேரத்தின்போது சிக்கலில் கொண்டுவிடும். வயதான கருத்தரிப்பின்போது உயர் ரத்த அழுத்த வாய்ப்புள்ளது. இது தீவிரமடைந்தால் உடனடியாய் குழந்தையை அறுவை செய்து எடுக்கவேண்டும்’ என்கிறார் சிங்கப்பூர் கே.கே. பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை டாக்டர் டான் காக் ஹியன்.
ரம்யா செய்த காரியத்தைப் பார்த்தால் ஒருவகையில் சிரிப்புதான் வரும். ஆனால் அதில் உள்ள விபரீதத்தை நினைத்தால் மனசு அடித்துக் கொள்ளும்.இருபது வயதுகூட ஆகாத ரம்யா இப்படியெல்லாம் நடந்துகொள்ளலாமா, என்றுகூட கேட்கத் தோன்றும். ஆனால் நடந்தது எதுவுமே அவருக்குத் தெரியாது என்கிறபோதுதான், அது எவ்வளவு பெரிய ஆபத்து என்று உணர முடிகிறது.ரம்யா செய்த காரியத்தைப் படித்துவிட்டு நீங்களே ஒரு முடிவுக்கு வாருங்கள்.எம்.பி.ஏ. பரீட்சைக்குப் படித்துக்கொண்டு இருந்த ரம்யா, அப்படியே அசந்து தூங்கிவிட்டாள். காபி கலந்து எடுத்து வந்த அம்மா, ‘‘அசந்து தூங்குகிறாள். தூங்கட்டும்’’ என்று போய்விட்டார். சிறிதுநேரம் கழித்து மகளை எழுப்பிவிட்டு படிக்கச் சொல்லலாம் என்று வந்தால், படுக்கையில் மகளைக் காணவில்லை. வீடு முழுவதும் தேடியும் ரம்யாவைக் காணவில்லை. வீட்டில் நிறுத்தியிருந்த அவளது சைக்கிளையும் காணவில்லை.இரவு நேரம் என்பதால் பதற்றம் கூடியது. பாடத்தில் சந்தேகம் கேட்க வகுப்புத் தோழிகள் யாரையாவது தேடிப்போய் விட்டாளோ, என்று எண்ணி ஆளாளுக்கு விசாரித்துப் பார்த்தார்கள். ‘‘வரவில்லை’’ என்ற பதில்தான் வந்தது. நேரமாக ஆக பெற்றோருக்குப் பயம் தொற்றிக்கொண்டது.சுமார் ஒரு மணி நேரம் கழிந்த பின்னர், தூரத்து உறவினர் ஒருவர் ரம்யாவை அழைத்துவந்து வீட்டில் விட்டார். ரம்யாவின் முகமே ஒரு மாதிரியாக இருந்தது. என்ன, ஏது என்று விசாரித்தபோது, பெற்றோருக்கு அடிவயிறே கலங்கியது.‘‘ரம்யா ரயில்வே ஸ்டேஷன்ல நின்னுட்டு இருந்தா? ‘என்ன ரம்யா. இங்ஙன இந்த நேரத்துல நிக்கிறே?’ன்னு ரயில்ல இருந்து இறங்கி வந்த நான் கேட்டேன். அதுக்கு அவள் ‘என் ஃப்ரெண்ட் உஷா இந்த ட்ரெயின்ல வர்றதா சொன்னா. அதுதான் அவள கூட்டிட்டுப் போகலாமுன்னு வந்தேன்’னு சொன்னா. உஷாவா, ‘அவளுக்குக் கல்யாணமாகி அமெரிக்கா போயி செட்டிலாகி மூணு மாசமாச்சே! அவ எப்படி தனியா வரப்போறான்?’னு கேட்டதும் ரம்யா முழிச்சா. ஏதோ தப்பு நடந்திருக்குன்னு, ‘ரம்யா நீ எதுவும் பேசாத எங்ககூட வா’ன்னு கூட்டிட்டு வந்துட்டோம்’’ என்றார்கள். ரம்யாவிடம் கேட்டால், ‘ஆமா உஷாதான் வரச் சொன்னா’ என்கிறாளே தவிர, தான் செய்த செயலைப் பற்றி எந்தப் பதற்றமும் இல்லாமல் இருந்தாள். அவளது காதில் உறக்கத்தில் உஷா பேசுவதுபோல் கேட்டிருக்கிறது. அதுதான் அவளை எழுந்து போக வைத்திருக்கிறது.பிறகுதான் ரம்யாவின் பெற்றோர் உண்மையை ஒப்புக்கொண்டார்கள். ரம்யா இப்படி அடிக்கடி தன்னை யாரோ அழைப்பதாகத் தூக்கத்தில் எழுந்து போய்விடுவதும், அழைத்துவருவதும் சகஜமாகிவிட்டது என்று சொன்னார்கள். இனியும் தாமதித்தால் ரம்யாவின் மனநிலை பாதிக்கக்கூடும் என்று மனநல மருத்துவர் ஒருவரிடம் அழைத்துப் போனார்கள். அவளை முற்றிலும் பரிசோதனை செய்த டாக்டர், ‘‘இது ஒரு இனம்புரியாத இன்னல் தரக்கூடிய மனநோய்தான். தங்கள் மனதிற்குள் சில குரல்களை இவர்களால் கேட்கமுடியும். அக்குரல்கள் சொல்கிறபடி அவர்கள் நடந்துகொள்வார்கள். இந்த மாதிரி சமயத்தில் யாராவது பார்த்து தடுத்தால் உண்டு. இல்லாவிட்டால் பெரிய விபரீதமாகிவிடும்’’ என்றார்.டெமென்ஷியா ப்ரேகாக்ஸ் (dementia Praecox) என்று ஒருகாலத்தில் அழைக்கப்பட்ட இந்நோய்க்கான அறிகுறிகள் மற்றும் இந்நோயின் நடத்தை எப்படி உண்டாகிறது என்று இன்றுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.பொதுவாக, நம் உடலில் உள்ள வேதிப்பொருட்களின் மாற்றங்களால்தான் பலருக்கு மனம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் வரும். சிலருக்கு நரம்பு சம்பந்தப்பட்ட கோளாறுகள் இருந்தால், மனம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் வரும். இன்னும் சிலருக்குப் பரம்பரைத் தன்மையில்கூட மனநோய்கள் வருவதுண்டு. ஆனால் இந்நோய் இந்தக் குறைபாடுகளால் வருவதாகத் தெரியவில்லை. ஆனால், இந்தக் குறைபாடுகள் எல்லாம் ஒன்று சேர்ந்து தாக்கும்போது, இப்படி நடந்துகொள்ள வாய்ப்புகள் அதிகம் என்று மட்டுமே ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். அண்மையில் நடந்த ஆராய்ச்சிகளின்படி, அன்பு இல்லாத, பாசத்தைக் கொட்டி சீராட்டி வளர்க்கப்படாத பெற்றோர்களிடம் வளரும் குழந்தைகளுக்கு இந்தப் பாதிப்பு அதிகம் என்று கண்டு பிடித்திருக்கிறார்கள்.இந்நோய்க்கான வேறு அறிகுறிகள் :பொதுவாக, காலத்திற்கும் இடத்திற்கும் பொருத்தமில்லாதபடி இவர்கள் நடந்துகொள்வார்கள்.தங்களுக்குள் எதோ ஒரு குரல் கேட்பதாகவும், அதற்குக் கட்டுப்பட்டு நடப்பதாகவும் காட்டிக் கொள்வார்கள்.ஒரு விஷயத்தைப் பற்றிப் பேசும்போது தெளிவான ஆதாரம் இல்லாமல் பேசுவார்கள். மடக்கிக் கேட்டால், பேச்சைத் துண்டித்துக் கொள்வார்கள். அடிக்கடி நீண்ட நேரம் மௌனத்தைக் கடைப்பிடிப்பார்கள்.ஒரு சிலர் சகஜமாகப் பேசுவார்கள். தாங்கள் படும் துன்பத்தை முன்பின் அறிமுகமில்லாதவர்களிடம்கூட ஒளிவுமறைவு இன்றி சொல்லிக்கொண்டு இருப்பார்கள். ‘எல்லாரும் தன்னை ஒதுக்குகிறார்கள். புருஷன் தன்னை கொடுமைப்படுத்துகிறான்’ இப்படிப் பேச்சு இருக்கும்.ரம்யா மாதிரி மருத்துவப் பரிசோதனைக்கு வந்த நடுத்தரப் பெண் ஒருத்தி, யாரோ தன் காதில் ‘நீ செத்துப் போய்விடு. இந்த உலகத்தில் நீ இருக்காதே. செத்துப்போ’ என்று அடித்துப் பேசுவதாகச் சொல்லிக்கொண்டு வந்தார்.இந்நோயால் இன்னும் பாதிக்கப்பட்ட சிலர், பெரிய சந்தேகப் பேர்வழியாக இருப்பார்கள். கணவன் எந்த செயலைச் செய்தாலும் அதை சந்தேகப்பட்டுப் பேசி, சண்டையை வரவழைத்துக்கொண்டே இருப்பார்கள். ஆண்களைவிட பெண்கள்தான் இந்தப் பாதிப்புக்கு அதிகம் ஆட்படுகிறார்கள்.அதீத கற்பனைப் பேச்சும், நடத்தையும்கூட இந்நோய்க்கு அறிகுறியாகச் சொல்லப்படுகிறது. ‘மீனம்பாக்கம் விமான நிலையம் இருக்கும் இடம் எங்களது. என் கொள்ளுத் தாத்தாதான் அதை தானமாகக் கொடுத்தார்’ என்பார்கள். எதாவது கல்யாண மண்டபத்தில் தரையைச் சுத்தம் செய்யும் வேலையில் இருப்பார்கள். ‘ஜனாதிபதி என் நெருங்கிய உறவினர்தான். ஏதோ என் போறாத காலம் இப்படி இருக்கேன்’ என்று புலம்புவார்கள்.இவர்களின் பேச்சில் ஒழுங்கு இருக்கும். கட்டுக்கோப்பு இருக்கும். சில சமயம் நம்பும்படியாகவும் இருக்கும். ஆனால், அது மிகைப்படுத்தப்பட்ட கற்பனையாகவே இருக்கும். இதற்குக் காரணம் எதிராளியைவிட, அவரே கற்பனையை உண்மை என்று நம்புவதன் விளைவுதான்.இப்படிப்பட்ட மனநிலையில் இருக்கும் ஒரு மருமகள், தன் மாமியார் எவ்வளவு கொடுமைப்படுத்தினாலும் சிரித்துக்கொண்டே இருப்பார் என்று சொல்லப்படுகிறது. அப்பேர்ப்பட்டவர்களின் உணர்வுகள் சூழ்நிலைக்குத் தக்கபடி இருக்காது. எது நடந்தாலும் பேசாமல் இருப்பார்கள். நீண்ட நேரம் ஒரே நிலையில் உட்கார்ந்திருப்பார்கள். உச்சகட்ட நடவடிக்கையின்போது, திடீரென்று மூக்கை நுழைப்பார்கள். அதுதான் பலசமயம் அவருக்கோ எதிராளிக்கோ பெரிய ஆபத்தை உண்டாக்கிவிடும். உதாரணத்திற்கு சில மருமகள்கள் தீக்குளிப்பதைச் சொல்கிறார்கள்.மேலே சொல்லப்பட்ட நடவடிக்கைகள் அதிக அளவு ஒருவரிடத்தில் இருந்தால் அவரை டெமென்ஷியா ப்ரேகாக்ஸ் என்கிற மனநோயால் பாதிக்கப்பட்டவர் என்ற முடிவுக்கு வரலாம் என்கிறார்கள். இது ஒருவகையில் மனச்சிதைவு நோயை ஒட்டியதுதான். என்றாலும் அதற்குண்டான அறிகுறிகளை வைத்து இதுவும் இந்நோய்தான் என்ற முடிவுக்கு வரமுடியாது என்கிறார்கள் மருத்துவர்கள்.இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களை எளிதில் குணப்படுத்தி விடமுடியும் என்கிறார்கள். மனதளவில் ஆரோக்கிய மாற்றங்கள், உடலளவில் நல்ல உடற்பயிற்சி, அன்பான சுற்றுச்சூழல் இருந்தாலே இதை எளிதில் நிவர்த்தி செய்யமுடியும் என்கிறார்கள்.எளிதான வழிகள்:1. வாக்கிங், ஜிம் : வாக்கிங் கட்டாயம் போகவேண்டும். குறைந்தது 30 முதல் 40 நிமிடங்கள் தொடர் வாக்கிங் அவசியம். வேகமாக நடக்கவேண்டுமே தவிர, ஓடக்கூடாது. இது முக்கியம். நடைப்பயிற்சிதான் உடலையும், மனதையும் ஒருமுகப்படுத்துவதாக அமையும். ஜிம்முக்குப் போவது ரொம்ப நல்லது.2. நல்ல மூடுக்கு வர முயற்சித்தல் : சம்பந்தப்பட்டவரை நல்ல சந்தோஷமான மூடில் இருக்கும்படி செய்யவேண்டும். குடும்பத்தாரின் கனிவான பேச்சு, நண்பர்களின் வாழ்த்துக்கள், உறவினர்களின் பாராட்டுக்கள் அவர் நல்ல மூடுக்கு வர உதவக்கூடிய உத்திகள்.3. ஒமேகா_3 : இம்மனநிலையில் இருப்பவர்கள் ஒமேகா _ 3 கொழுப்புள்ள மீன்களை உணவில் சேர்த்துக்கொண்டால், அதில் உள்ள அமிலம் மூளையில் உள்ள வேதிப்பொருட்களுடன் கலந்து நல்ல மூட் உருவாக உதவும் என்கிறார்கள். இதற்காக நீங்கள் உங்கள் மருத்துவரை ஒருமுறை கலந்தாலோசிக்க வேண்டும்.4. மௌனமாக இருக்கவிடக் கூடாது : இத்தகைய மனநிலை பாதிப்பில் இருப்பவர்கள் அடிக்கடி நீண்ட நேரம் மௌனமாக இருப்பார்கள். உடன் இருப்பவர்கள்தான், அவர்களின் மௌனத்தைக் கலைக்க ஏதாவது செய்யவேண்டும். அவருக்குப் பிடித்த கிரிக்கெட் வீரர், பிடித்த நடிகர், நடிகை, அரசியல் தலைவர்கள் பற்றி அவர்களுடன் விவாதிக்கலாம். அவர்களுக்குச் சாதகமாகப் பேசுவது அவசியம்.5. தனியறையில் தூங்கவிடக் கூடாது : இப்படிப்பட்டவர்களை தனியறையில் தூங்கவிடக் கூடாது. நம் அருகில் அம்மாவோ, தோழியோ இருக்கிறார்கள் என்ற நினைப்பே அவர்களை உறக்கத்தில் மற்ற சிந்தனைக்கு அழைத்துச் செல்லாது என்கிறார்கள். தூக்கத்தில் எழுந்து நடந்தால், அவர் எங்கே போகிறார் என்றுதான் பார்ப்போமே என்று அவரைப் பின்தொடர்வது போன்ற விபரீத விளையாட்டுக்களில் ஒருபோதும் இறங்கிவிடாதீர்கள்.6. யோகா, தியானம் : மனதில்மாற்று எண்ணங்கள் உருவாகாமல் இருக்க முறையான யோகாவும், தியானமும் இவர்களுக்கு உதவும்.7. பொழுதுபோக்கு : புதிதாக ஏதாவது பொழுதுபோக்கு அம்சங்களில் ஈடுபடலாம். சுற்றுலா. வயலின், வீணை வாசிக்கக் கற்றுக்கொள்ளுதல், இப்படி பயனுள்ள பொழுதுபோக்காக இருந்தால் மூளைக்கும் வேலை கொடுத்ததாகும். மனதிற்கும் உற்சாகமாக இருக்கும். வேறு சிந்தனைகளை உருவாகவிடாமல் இவை தடுக்கும்.

கருவுற்ற காலத்தில் வெளித்தோற்றத்தில் மட்டுமே நமக்கு மாற்றங்கள் ஏற்படுவதில்லை... உள்ளுக்குள், ஹார்மோன்களின் செயல்பாட்டினால் நம்முடைய உடலின் அனைத்து இயக்கங்களுமே மாறுபட்டுப் போகிறது. இப்படி சுமார் பத்து மாதகாலம் இந்த மாற்றங்களுக்கே பழகிப்போன நம் உடல், திடீரென்று ஒரே நாளில் பழைய நிலைமைக்குத் திரும்பிவிடாது. அந்த மாற்றங்கள் முற்றிலுமாக இல்லாவிட்டாலும் ஓரளவுக்காவது பழைய நிலைக்கு வர குறைந்தபட்சம் ஆறு வார காலம் ஆகும். சிசேரியன் ஆனவர்களுக்கும் இது பொருந்தும் என்றாலும், காயங்கள் இருப்பதால் அவர்களுக்குக் கூடுதல் நேரம் பிடிக்கும்.குழந்தை பிறந்ததும், ‘‘சூடா காஃபி சாப்பிடக்கூடாது..! பச்சைத் தண்ணில கை வைக்காதே..! குழந்தைக்குப் பால் கொடுக்கும்போது மல்லிகைப்பூ ஆகாது! மாம்பழமா... கூடவே கூடாது!’’ என்று நம் வீட்டுப் பெரியவர்கள் ஒரு பெரிய பட்டியலே போடுவார்கள். உண்மையில் இதெல்லாம் தேவையில்லாத பயங்கள்தான்!இன்னும் சில வீடுகளில் குழந்தை பெற்றுக் கொண்ட பெண்ணுக்குத் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு வெறும் பிரெட் மட்டும்தான் சாப்பிடக் கொடுப்பார்கள். இதெல்லாம் ரொம்பத் தவறான விஷயம். பிரசவமான பெண்ணுக்கு சாதாரணமாக, நாம் வீட்டில் சாப்பிடும் உணவு வகைகளைக் கொடுப்பதுதான் சிறந்தது. அப்படிக் கொடுத்தால்தான் அம்மாவுக்கு இயல்பாக தாய்ப்பாலும் சுரக்கத் தொடங்கும்.நார்மலான டெலிவரிக்கே சில சமயங்களில், வஜைனாவின் வாய்ப்பகுதியில் தையல் போட வேண்டி வரலாம். சிசேரியனுக்கோ சொல்லவே வேண்டாம். இப்படிக் காயப்பட்ட பெண்களுக்குத் தண்ணீரே கொடுக்கக் கூடாது... அப்படியே கொடுத்தாலும் தொண்டையை நனைக்குமளவுக்குக் கொடுத்தால் போதும் என்று பல வீடுகளில் சொல்வார்கள்.தண்ணீர் அதிகம் குடித்தால் காயத்தில் சீழ் பிடித்துவிடும் என்பது அவர்களின் விளக்கம். இந்தத் தண்ணீர்க் கட்டுப்பாடு சில நாட்கள்தான் என்றில்லை... சில மாதங்கள் வரைகூட தொடரும்! இதுவும் மிகவும் தவறான விஷயம்.உண்மையில் இந்தச் சமயத்தில்தான் தாய் நிறைய, தண்ணீர் குடிக்க வேண்டும். அப்படி நிறைய தண்ணீர் குடித்தால்தான் தாய்க்கு நீர்க்கடுப்பு (யூரினரி இன்ஃபெக்ஷன்) போன்ற பிரச்னைகள் ஏற்படாது.குழந்தை பிறந்தவுடனேயே அத்தனை நாளும் பெரிதாகி, குழந்தையைத் தாங்கி ஏந்திய தாயின் கர்ப்பப்பை மெதுமெதுவாக பழைய நிலைக்கு வந்துவிடும். அந்தச் சமயத்தில் ரத்தப்போக்கு வருவது இயற்கை. 4_5 வாரங்கள் வரைக்கும் இந்த ரத்தப் போக்கு நீடிக்கும். அதற்குமேல் போனால் தவறு.இப்படி அதிகப்படியாக ரத்தப்போக்கு ஏற்படக் காரணம் என்ன..?தாயின் கர்ப்பப்பையில் நோய்த்தொற்று ஏதேனும் ஏற்பட்டிருந்தால் இப்படி ஆகலாம். சில சமயம் தாயின் கர்ப்பப்பையில் நஞ்சின் பாகங்கள் அல்லது சில திசுக்கள் வெளி வராமல் விட்டுப் போயிருந் தாலும் அதிகப்படியான ரத்தப் போக்கு ஏற்படலாம்.இப்படி ஆகும் போது மருத்துவரை அணுகுவதுதான் சரி. மருந்து மாத்திரைகள் மூலம் அவரால் தான் இதற்கு நிரந்தரத் தீர்வு கொடுக்க முடியும்.பிரசவமான பெண்களுக்கு மிகவும் அரிதாக ஙிணீதீஹ் ஙிறீuமீs என்கிற நிலை ஏற்படுவதுண்டு. (இது எதனால் ஏற்படுகிறது என்றெல்லாம் சொல்லமுடியாது)இதைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம்...சில பெண்கள் டெலிவரி ஆனதும் தங்களையறியாமல் ஒருவித மன அழுத்தத்தால் அவதிப்படுவதுண்டு. இந்த நிலைக்கு ஆளாகும் பெண்கள் தங்களுக்குள் தாங்களாகவே காரணமின்றி அழுவார்கள். குழந்தையை கவனிக்கக்கூட ஆர்வம் காட்டாமல் ஒருமாதிரி விட்டேத்தியாக இருப்பார்கள். இதுபோன்ற சில அறிகுறிகளால் இவர்களை அடையாளம் கண்டுகொள்ள முடியும். இந்த நிலைக்குத்தான் Baby Blues என்று பெயர். டெலிவரி ஆன கொஞ்ச நாட்களில் இது தானாகவே சரியாகத் தொடங்கும்.சிலருக்கு இதுபோல எல்லாம் சாதாரணமாக இல்லாமல் தீவிரமான பிரச்னையாக இது உருவெடுக்கலாம். அப்படி அது மோசமான நிலையை அடையும்போது அதை Puerperal Psychosis என்று பெயரிட்டு அழைக்கிறோம். இது ஏற்கெனவே மனநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வரலாம். சாதாரணப் பெண்களுக்கும் இது போல நிலைமை தீவிரமடைவதுண்டு.இந்த நிலை ஏற்படும்போது சம்பந்தப்பட்ட பெண்ணைத் தனியாக விடுவது நல்லதல்ல. காரணம், அவர்களுக்குத் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் இந்தச் சமயத்தில் அதிகப்படியாக ஏற்படும். அதனால் அவர்களை மருத்துவரின் கண்காணிப்பில் வைத்திருப்பதுதான் நல்லது.சிலசமயம் ஆவேசத்தின் உச்சியில் இந்தப் பெண்கள் தங்களையும் அறியாமல் குழந்தையைக் கொன்றுவிடும் அளவுக்கேகூடச் செல்வார்கள்!தேர்ந்த மனநல மருத்துவரிடம் இவர்களை அழைத்துச் சென்று சிகிச்சை கொடுத்துவர, மெதுவாகக் குணம் தெரியும். சிகிச்சையின்போது இவர்களுக்கு மருந்துகள் கொடுக்க வேண்டி வரும்போது, சில சமயம் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பதைக்கூட நிறுத்த வேண்டி வரலாம்..குழந்தை பிறந்ததும் பெண்களுக்கு இதுபோன்ற மனரீதியான மாறுதல்கள் ஏற்படுவதோடு, வெளித்தோற்றத்திலும் பல மாற்றங்கள் ஏற்படலாம். நிறையப் பேருக்கு ஏற்படுவது தலைமுடி கொட்டும் பிரச்னை.. இது சாதாரண விஷயம்தான்.கர்ப்பமாக இருந்த காலத்தில் நம்முடைய உடலில் ஹார்மோன்களின் செயல்பாடுகள் சற்றே அதிகப்படியாக இருக்கும். அந்தச் சமயத்தில் கூடுதல் ஊட்டம் பெற்று முடி நன்றாக வளரத் தொடங்கும். குழந்தை பிறந்ததும் ஹார்மோன்களின் செயல்பாடுகள் வழக்கம்போல ஒரு கட்டுக்குள் வந்துவிடும். அந்தச் சமயத்தில்தான் கூந்தல் உதிரும் பிரச்னை தலைதூக்கும். இதைத் தடுக்க வழியில்லை என்றாலும் ஊட்டச்சத்து மிக்க உணவு வகைகளைத் தேர்ந்தெடுத்துச் சாப்பிட்டுவர, மீண்டும் முடி இயல்பாக வளர வாய்ப்புள்ளது.கர்ப்பமடைந்த ஒருசில மாதங்களில் தாயின் மார்பகம் தாய்ப்பால் சுரப்பதற்கு ஏதுவாக, அளவில் பெரிதாகத் தொடங்கும். குழந்தை பிறக்கும்போது முழுவளர்ச்சியடைந்துவிடும் தாயின் மார்பகம், பால் சுரப்பதால் சற்றே கனமாகி லேசாகத் தொங்கினாற்போல காட்சி தரும். இது கவனிக்கப்பட வேண்டிய விஷயம். இதை இப்படியே விட்டுவிட்டால் தாயின் மார்பகம் நிரந்தரமாகவே தொங்கிப் போய்விடும் வாய்ப்புள்ளது.கனமான மார்பகத்துக்கு சப்போர்ட் தரும் வகையில் தாய் எப்போதும் பிரா அணிவது நல்லது. அதுவும் தனக்கு சரியான அளவிலான பிரா அணிய வேண்டும். பிரா அணிந்தால் குழந்தைக்கு ஒவ்வொருமுறை பாலூட்டும் போதும் கஷ்டமாக இருக்குமே என்று நிறையப் பேர் கேட்கிறார்கள். இவர்கள் சாதாரண பிரா அணியாமல் கடையில் ஸ்பெஷலாக விற்கக்கூடிய ‘மெட்டர்னிட்டி பிரா’ வாங்கி அணியலாம். இப்படி அணிந்தால் ஒவ்வொரு முறை பால் கொடுக்கும் போதும் பிராவை அவிழ்த்து மாற்றவேண்டிய அவசியமில்லை.கர்ப்பகாலத்தில் நம் வயிற்றின் தசைப்பகுதிகள் கர்ப்பப்பை விரிவடைவதற்கு ஈடு கொடுத்து விரிவடையும். குழந்தை பிறந்ததும் கர்ப்பப்பை தானாகவே சுருங்கிவிடும். ஆனால் விரிவடைந்த வயிற்றின் தசைப் பகுதிகளோ பழைய நிலைக்கு வர நாளாகும்.இது தெரியாமல் என்னிடம் வரும் பலபெண்கள் ‘டாக்டர்! என் வயிற்றைப் பார்த்தால் இன்னொரு பாப்பா உள்ளே இருக்கும் போலிருக்கே...’ என்று கேலியாக, சில சமயம் சந்தேகமாகக் கூடக் கேட்பதுண்டு.இப்படிப் பெருத்துப்போன வயிற்றை இயல்பான நிலைக்குக் கொண்டுவர, குழந்தை பிறந்ததுமே பெல்ட் போட வேண்டும் என்று பல வீடுகளில் இன்னும்கூட சொல்கிறார்கள். பெல்ட் போட்டால் இந்நிலை உடனே சரியாகிவிடும் என்று நினைக்கிறார்கள். இது ரொம்பத் தவறு. ஏன் தெரியுமா?குழந்தை பிறந்தவுடன் அதுவரை விரிந்திருந்த வயிற்றுப் பகுதியின் தசைப்பகுதிகள் தளர்ந்து போயிருக்கும். பெல்ட் போடுவதால் ஏற்படும் இறுக்கத்தால் இந்தத் தசைகள் வலுவிழந்துதான் போகுமே ஒழிய அளவில் மாறுதல் ஏற்படாது. தளர்ந்து போன வயிற்றுத் தசைகள் மேலும் தளர்ந்து போகாமல் இருக்க, சரியான அளவிலான பேண்டீஸ் (Panties) அணிந்தாலே போதும்.அதனால், வயிற்றை அதன் இயல்புப்படியே சுருங்கச் செய்வதுதான் சிறந்தது. இதற்கென்று PostNatal போன்ற சில எளிய பயிற்சிகள் உள்ளன.
ஒரு பெண்ணின் வாழ்க்கையில் கருத்தரித்த காலகட்டம்தான் மிக சந்தோஷமான காலம். உடலில் மாற்றங்கள் ஏற்படுவது உண்மைதான் என்றாலும், சிலர் அந்த மாற்றங்களைக் கண்டு திகைப்படைகிறார்கள். சிலர் பயப்படுகிறார்கள். சிலர் எதுவும் புரியாமல் விழிக்கிறார்கள். இன்னும் சிலருக்கு அந்த மாற்றங்கள் மேல் எரிச்சலோ, வெறுப்போ எழும். இவற்றைத் தவிர்க்க எவ்வாறான மாறுதல்கள் உடலில் ஏற்படுகின்றன என்று தெரிந்து கொள்வது நல்லதுதானே. முதல் மூன்று மாதம் : பதினான்கு வாரங்கள் வரை எந்த நேரத்திலும் (காலையில் மட்டுமல்ல) அடிக்கடி குமட்டல் மற்றும் வாந்தியின் உணர்வு ஏற்படலாம். இதற்கு உங்கள் மாறும் ஹார்மோன்களே காரணம்.உங்கள் மார்பகத்தை தாய்ப்பால் கொடுக்கத் தயார் செய்வதற்காக நேரிடும் ஹோர்மேனஸ் மாறுதல்கள் காரணமாக மார்பகம் வீங்குகிறது. மிருதுவாகிறது.மூக்கினுளிருக்கும் லைனிங்கில் கூடுதலான அழுத்தம் இருப்பதால் மூக்கடைப்பு ஏற்படுகிறது. இது கர்ப்பப்பையினுள் உள்ள லைனிங் போலவே உள்ளது. கருத்தரிப்பினால் இரண்டிலும் அதிகமான இரத்த ஓட்டம் இருக்கிறது.அதிகமான சோர்வை அதிகபட்ச பெண்கள் உணருகிறார்கள். இதற்குக் காரணம் ஒரு குழந்தைக்கு வடிவம் கொடுக்க உங்கள் உடல் அதிக அளவு சக்தியை உபயோகிக்கிறது.அடிக்கடி சிறுநீர் கழிப்பிற்குக் காரணம் கர்ப்பப்பை வளர்ந்து, மூத்திரப்பையை அழுத்துவதுதான்.மார்னிங் சிக்னெஸ் உள்ள பெண்கள் மாவு சத்துள்ள உணவுப் பண்டங்களுக்காக சில சமயம் ஏங்குகின்றனர். ஏனெனில் மாவுச் சத்து குமட்டலை அடக்க உதவுகிறது.கருத்தரித்த நிலையின் மாஸ்க் என்பது கன்னத்திலும் மூக்கிலும் ஆங்காங்கே காணப்படும். இந்த அனுபவம் எல்லோருக்கும் ஏற்படுவதில்லை. பிரசவத்திற்கு பிறகு இது மறைந்துவிடுகிறது. இதற்கு ஹார்மோன்களின் மாற்றங்கள் மற்றும் சூரிய ஒளியே காரணம்.இரண்டாவது மூன்று மாதம் : முதல் மூன்று மாத கால அசௌகரியங்கள் மறைந்தவுடன் ஒரு மொத்த ஆரோக்கியமான உணர்வு திரும்புகிறது.இடுப்பு தடிப்பாகிறது. அடிவயிறு ரவுண்டாகவும் உறுதியாகவும் ஆகிறது.நெஞ்சில் எரிப்பு அதிகரிக்கிறது. இதற்குக் காரணம், கர்ப்பப் பை வளரும்போது, வயிற்றை அழுத்தி, உணவு செல்லும் குழாயைக் குருக்குகிறது. வயிற்றில் அமிலமும் அதிகமாக உற்பத்தியாகிறது.கர்ப்பப் பை குடல்கள் மீது அழுத்துவதால், உணவின் போக்கு குறைகிறது. வைட்டமின் மற்றும் இரும்புச் சத்து அதிகமாக உட்கொள்வதால் மலச்சிக்கல் ஏற்படுகிறது.மார்பகம் மற்றும் அடிவயிற்றின் மீது தழும்புகள் ஏற்படுகின்றன. அரிப்பு, சருமம் ஸ்ட்ரெச் ஆவதால் ஏற்படுகிறது.சாதாரண பிக்மெண்டின் மாறுதல்களின் ஒரு பங்காக முலைக்காம்பைச் சுற்றியுள்ள சருமம் கருமையாகிறது. தொப்புள் வரை அல்லது அதற்கு மேலேயும் ஒரு மெல்லிய கருமை ரேகை வருகிறது.குழந்தையின் அசைவு யாரோ லேசாகக் குத்துவதைப் போலிருக்கும்.உணவுக்காக ஏக்கம் இதில் எழும். நெஞ்செரிச்சலை அடக்க எலுமிச்சை வகைப் பழங்கள் நல்லது. முக்கியமாக உப்பைக் குறைப்பது முக்கியம்.மூன்றாவது மூன்று மாதம் : உங்கள் முதுகுக்கு ஆதரவளிக்கும் தசைநார் மற்றும் தசைகள் மீது அதிகமாக அழுத்தமிருப்பதால் முதுகுவலி ஏற்படுகிறது.நீங்கள் கீழே படுத்துக் கொள்வதால் காலில் இழுப்பு வருகிறது. உங்கள் உடலில் இரத்தத்தின் கொள்ளளவு அதிகரிக்கிறது. ஈர்ப்பு காரணமாக இரத்தம் கால்களுக்குச் செல்கிறது. ஆகையால், தசைகள் மீது அழுத்தம் ஏற்பட்டு, கால்களில் இழுப்பு வருகிறது.மூச்சுத் திணறல் ஏற்படுவதற்கு காரணம், குழந்தை உதரவிதானம் மீது அழுத்துகிறது. சுவாசப் பை விரிந்து கொடுப்பதில்லை மற்றும் உங்களுக்கு வேண்டிய அளவு வாயு கிடைப்பதில்லை.குழந்தையின் அசைவைக் காண முடிகிறது. இப்போது குழந்தையின் எடை கூடுகிறது மற்றும் அதன் உதையையும், விக்கலையும் கூட நீங்கள் உணர முடிகிறது.உறங்குவதில் கடினமாக இருக்கும். இதற்கு காரணம் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய தேவை மற்றும் எடை அதிகரிப்பினால் ஏற்படும் அசௌகரியங்களாகும்.இவற்றையெல்லாம் தெரிந்து வைத்துக்கொண்டவர்களுக்கு இந்த மாற்றங்கள் விரும்பத்தக்கவையாக இருக்கும். ஒரு ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்க மனம் தயாராகிவிட்ட உணர்வு எழும். தாயாகப்போகும் நாளை எதிர்பார்த்துக்கொண்டு இருப்பீர்கள்.